pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

ஒஆஹூ - Paradise of America

‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed (Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து, ‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி..

வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம் படித்திருக்கிறேன். ஊர்சுற்றிப் பார்க்க புத்தகம் படிப்பது இது தான் முதன் முறை.. ஆனாலும் அந்த டௌகார்தி மிக அழகாகவே கதை எழுதி இருக்கிறார். ஹவாய்த்தீவுகள் - மொத்தம் நான்கைந்து குட்டிக் குட்டித் தீவுகள், பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கக் கண்டத்திலிருந்து கிட்டத் தட்ட 3000 மைல் தொலைவில் இருக்கின்றன. எங்க ஊரிலிருந்து பறக்க ஐந்து மணி நேரம், இது தான் இருக்கிறதிலேயே மிகக் குறைவான நேரம் என்று நினைக்கிறேன். 1800களில் அமெரிக்காவின் ஒரு மாநிலமாக தன்னை இணைத்துக் கொண்ட காரணத்தால், போய் வர புதிதாக விசா ஒன்றும் வேண்டியிருக்கவில்லை.

ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து நிறைய பேர் வந்து போகிறார்கள். நாங்கள் போன இடம் ஒஆஹூ என்ற ஒரே தீவு மட்டும் தான். சின்ன தீவு, காரில் இரண்டு மணி நேரத்தில் சுற்றி வந்துவிடக் கூடிய அளவுக்குச் சின்னது. போய் இறங்கியவுடனே அமெரிக்காவுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பசிபிக் பெருங்கடலில் வெடித்துச் சிதறிய ஒரு எரிமலையிலிருந்து விழுந்த பூமித் துளிகளான இவை சின்னச் சின்னத் தீவுகளாக உருவெடுத்து, மெல்ல நிறமும் வடிவமும் மாறி, செழிப்பான tropical பூமியாக இருக்கின்றன. விமானத்திலிருந்து இறங்கியவுடனே வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே தென்னை மரங்களும், பச்சை மலைகளும், நீலமும் பச்சையுமாக மயில் கழுத்து நிறத்தில் கடலும் என்று கேரளாவை நினைவுப் படுத்துகிறது. கேரளா போலவே இதையும் பூலோக சொர்க்கமாகத் தான் விளம்பரப்படுத்துகிறார்கள் - Paradise Islands..

Hawaii1

கடலோரமாக வண்டி ஓட்டிக் கொண்டே போனால், மணல் கண்ட இடமெல்லாம் கடற்கரை தான். ஓரங்களை விட்டுவிட்டால், நடுப்பகுதியில் எல்லாமே மலை.. கொஆலு(Koalu), காஆலா(Ka’ala), என்று விதம் விதமாக மலைகள். மலைமேல் ஏறி கடலைப் பார்ப்பது ஒரு முக்கியமான சுற்றுலாச் செயல்(activity). ஒஹாஹூ தீவை நான்கு பகுதியாக பிரித்துச் சுற்றிப்பார்க்கச் சொல்லியது நான் படித்த புத்தகம் - வைக்கீகீ மற்றும் தலை நகரமான ஹொனுலூலூ இருக்குமிடம், கிழக்குக் கரை, வடக்குக்கரை, மத்தியத் தீவு.

வைகீகீ மற்றும் ஹொனுலூலூ இருக்குமிடங்கள், முக்கிய சுற்றுலாப் பிரதேசங்கள். இங்கே கடல் அத்தனை கொந்தளிக்காமல் அமைதியாக இருக்கிறது. குழந்தைகள் கூட கடலில் நீச்சலடிக்கிறார்கள். நாங்கள் அதிகமாக இந்த இடத்தில் இருக்கவே இல்லை.. கூட்டம், வண்டி நிறுத்துமிடமின்மை, போன்றவை முக்கிய காரணங்கள்..

கிழக்குக் கடலோரத்தில் மிக அழகான, காவியமான கடற்கரைகள் பல இருக்கின்றன. முக்கியமாக ஒஆஹூவின் மண்ணின் மைந்தர்களும், சிலபல கோடீஸ்வரர்களும் இருக்கும் இந்தப் பகுதி, நம்ம ஊர் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியை நினைவுப்படுத்துகிறது. லானிகாய்(Lanikai) என்று ஒரு பீச்.. இரண்டு குட்டி தீவுக்குழந்தைகள், வெள்ளை மணல், சுத்தமான தண்ணீர், என்று லானிக்காய் ஏதோ திரைப்படங்களில் வரும் அமைதியான மணல் பிரதேசம்..

கிழக்குக் கடலோரத்தின் முக்கிய சுற்றுலாத்தலம் - ஹனௌமா வளைகுடா(Hanouma Bay). கடல் நிலத்துக்கு நடுவில் புகுந்து பாதுகாப்பான வளைகுடாவை உருவாக்கி இருக்கும் இந்தப் பகுதியில், தண்ணீர் ஓரளவுக்கு அமைதியாக இருக்கிறது. நிறைய கடற்பாசி (coral reefs) இருப்பதால், மீன்கள் இதைத் தன் வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன. நீருக்கும் பார்க்கும் கண்ணாடியுடன் கூடிய ஒரு மாஸ்க்கும், வாய்வழியாக மூச்சுவிட தனியாக ஒரு குழாயுமாக தண்ணீரில் இறங்கி நீச்சலடித்துக் கொண்டே இந்த மீன்களைப் பார்க்க இது நல்ல இடம். வார இறுதிகளில் குழந்தை குட்டியோடு இந்த snorkling செய்ய இந்த ஊர் மக்கள் வந்து விடுகிறார்கள். எப்போதுமே சுற்றுலாவாசிகளின் கூட்டமும் இருக்கிறது. நீச்சலே தெரியாமல், இந்தக் கடலில் இறங்கி மிதக்கக் கற்றுக் கொண்டு நான் கூட நிறைய மீன் பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. கொஞ்சம் நீந்தத் தெரிந்தால் கடல்ஆமைகளைப் பார்த்திருக்கலாம்.. ம்.. என்ன செய்ய.. ‘அடுத்தமுறை பார்க்கலாம் ஆமைகளே!’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.. (ஆமாம், இராமேஸ்வரத்தில் கூட நிறைய கடல்பாசி இருப்பதாக சொல்றாங்களே, அங்க snorkeling பண்ண முடியாதுங்களா?)

Hawaii5

கிழக்குக் கரையோரமாக வண்டி ஓட்டிக் கொண்டே வந்தால், அப்புறம் அமெரிக்க ராணுவத்தின் கடற்ப்டைப் பிரிவு ஒன்று இங்கே இருக்கிறது. அதெல்லாம் அவர்களின் குடிமக்களுக்கே அனுமதி மறுப்பாதலால், தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே அப்படியே பயணித்து வடக்குக் கரை வந்தால், ‘அப்பா! இத்தனை நேரம் பார்த்த கடலா இது?!’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தப் பக்கத்து கடல் அலைகள் மிகப் பெரியவை. குளிர்காலத்தில் தான் பெரிய பெரிய அலைகள் வந்த வண்ணம் இருக்குமாம் இங்கே. ஒஆஹூவின் வடக்குக் கரைதான் உலகத்திலேயே பெரிய அலைகளின் இடமாம்! Surfing எனப்படும் நீர் விளையாட்டில் வல்லவர்கள் இந்தப் பெரிய அலைகளுக்காகவே குளிர்காலத்தில் வடக்குக் கரையில் முகாமிட்டுவிடுவார்களாம். நாங்கள் சென்றிருந்த ஐந்து நாட்களில், மூன்று நாட்கள் - கிறிஸ்துமஸை ஒட்டி - முப்பதடி உயர அலைகள் வந்தவண்ணமிருந்தன. இந்தத் தீவுவாசிகள் மகிழ்ச்சியோடு வந்து அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு, surf செய்தவண்ணமிருந்தனர்.

Hawaii4

இந்த நாட்களில் வடக்குக் கரையோர கடற்கரைப் பகுதிகள் எல்லாமே மூடப்பட்டுவிடுகின்றன. நீச்சல் தெரிந்தால் மட்டும் தான் இதில் உள்ளே போக அனுமதி கிடைக்கும். சாண்டாவின் பரிசு என்று சொல்லி மகிழ்ச்சியோடு அலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். இந்த high surf பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது surfing செய்வதற்காகவே ஒஆஹூ வந்த கணவரின் நண்பர், ‘உங்க நாட்ல கூட இது மாதிரி சில தீவு இருக்காமே, அதுவும் உலகின் முதல் 100 surfsiteகளில் ஒன்று தெரியுமா?’ என்றார். அந்தமான் தீவுகளைப் பற்றிய இந்த இரகசியம், நம்ம சுற்றுலாத் துறைக்குத் தெரியுமா?

மத்திய ஒஆஹூவின் சிறப்பு அவற்றின் மலைகளின் அழகு தான். இதில் அமெரிக்க ராணுவம் மற்ற இரண்டு படைகளான வான்படை, தரைப்படைக்கான தளங்களை அமைத்துக் கொண்டுள்ளது போலும்.. இங்கே அதிகமாக மலைகள் மட்டும்தான்.

Hawaii3

டைமண்ட் க்ரேட்டர்(Diamond Crater) என்னும் எரிமலையின் வாய்ப் பகுதிக்கு ஏறுவது இன்னுமொரு முக்கிய சுற்றுலாச் செயல். மிக உயரமான இந்தச் சிகரத்தில் ஏறிப் பார்த்தால் ஒஹாஊவின் கடலும், தலைநகரமும் மிக அழகான காட்சியாக விரிகின்றன. இன்னும் இதே போல் கோகோ க்ரேட்டர்(Koko Crator), கோகோ ஹெட்(Koko Head), பாலி மலைகள், என்று காடும் மலையுமான இடங்கள் நிறைய இருக்கின்றன.

நாங்கள் பார்க்காமல் விட்ட இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் பேர்ள் துறைமுகம்(Pearl harbour). இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய விமானங்களால் அடிவாங்கிய இந்த இடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் (அமெரிக்க சுற்றுலாத்துறைக்குச் சொல்லியா தரவேணும்?!).. இது தவிர, இன்னும் ஒழுங்காக நீச்சல் தெரிந்தால், கிழக்கிலும் வடக்கிலுமாக பல இடங்களில் அழகாக snorkeling, படகு விடுவது என்று பலவும் செய்ய முடியுமாம். அடுத்த முறை இங்கே வந்தால் ஒழுங்காக நீச்சல் கற்றுக் கொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டிருக்கிறேன்..

Hawaii2

ரொம்ப ஆசைப்பட்டு பார்க்க முடியாமல் போனது ஆமைகளைத் தான். ‘கடலோரத்திலேயே வெயில் காய்ந்து கொண்டிருக்கும்’ என்று அந்தப் புத்தகத்தில் இருந்தது. எல்லா கடல் ஓரங்களிலும் தேடிப் பார்த்து நொந்துபோய் புத்தகத்தைப் பார்த்தால், ‘வெயில் காலத்தில்’ என்று முதலிலேயே போட்டிருக்கிறார்கள்.. ம்ம்.. திரும்ப வெயிலில் வர வேண்டியது தான்.

இத்தோடு ஹவாய் நாட்டு மக்களின் நாகரிடம், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியெல்லாம் நிறைய இடங்கள் இருக்கின்றன. Polynesian - என்னும் இனத்தைச் சார்ந்த மக்கள் இந்த ஊரின் பூர்வகுடிகள். பசிபிக் பெருங்கடலில், ஹவாய் தாண்டி, ஆஸ்திரேலியா வரையிலான சில தீவுகள் எல்லாம் இந்த Polynesia நாகரிகத்துக்குள் வருகிறது. நியூஸிலாந்து, தஹிதி, சமோஆ, மார்குஸாஸ் தீவுகள் என்று பல தீவுகளைச் சொல்கிறார்கள். இதைப் பற்றிய showக்கள் நடத்தும் ஒரு சுற்றுலாத்தலமும் இருந்தது - polynesian cultural center. நாடகங்கள், பாட்டும் நடனமும் மட்டும் தான் என்பதால் இங்கும் நாங்கள் நிற்கவில்லை.

நாங்கள் சென்ற நேரம் ஒபாமா வேறு குடும்பத்தோடு வந்திருந்தார். நம்ம ஊர் மந்திரிகள் மாதிரியே, அவர் தங்கி இருந்த தெருவைப் பாதுகாப்பு கருதி மூடிவிட்டார்களாம். அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த கைலுவா கடற்கரையையும் கடல்பகுதியையும் மூடி வைத்ததை ஒஆஹூ மக்கள் ரொம்பவே கண்டித்தார்கள் - ‘நல்ல surf நேரத்தில் இப்படி ஒரு குடும்பத்தோடு surf செய்யும் பீச்சை மூடிவைத்தால் எப்படி?!’ என்று ரொம்ப கோபம்.. அதே சமயம், அமெரிக்க கிழக்குக் கரை பூராவும் பனிப்புயலில் மூழ்கி இருக்கையில் குடியரசுத் தலைவரும் அவர் குடும்பமும் இங்கே வெயிலில், பீச்சில் காய்வதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் ஹவாய்ச் சுற்றுலா வருவார்கள் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது.

திரும்ப வேண்டிய நாள் வந்த போது தான் நிஜமாகவே சொர்க்கத்திலிருந்து திரும்புவது போல் மனமே வரவில்லை.. இன்னும் ரெண்டு மூணு நாளாவாது இருந்துட்டு போகலாமே! என்று இருவருமே நினைத்தோம். டிக்கட் மாற்ற வழியிருந்திருந்தால், ஒருவேளை இருந்திருப்போம்.. ம்ம்,.. அடுத்தமுறை நீச்சல் கற்றுக் கொண்டு வெயில் காலத்தில் கடல் அமைதியாக இருக்கும்போது வரவேண்டும்…..

இன்ன பிற:
1. தென்னை மரங்கள் நிறைய இருந்தாலும் தேங்காய்களைக் காணவில்லை. தேங்காய்கள் இருந்து, யார் தலையிலாவது விழுந்து வைத்தால், அது ஒரு liability (அதாவது, அந்த ஆளின் மருத்துவச் செலவு பூராவும் தென்னை மரம் வளர்ப்பவர் தர வேண்டுமாம்!) என்று மரங்களில் காய் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.
2. கடற்கரைப் பகுதிகளை பல காலங்களுக்கு முன்பிருந்தே யார் யாரோ வளைத்துப் போட்டுக் கொண்டாலும், அரசாங்க உத்தரவுப்படி எல்லா கடற்கரையும் மக்களுக்கானது. Private beach என்று ஏதுமில்லை. அப்படிச் சொந்தம் கொண்டாடுபவர்களும் தங்கள் நிலத்தில் வண்டி நிறுத்த மட்டும் தான் பணம் வாங்க முடியும்.
3. நம்ம ஊரில் கூட விளையும் பூவான plumeria (தமிழில் என்ன? எங்க வீட்டில் ஏதோ நாக கன்னிகை மாதிரி ஒரு பேர் சொல்லுவாங்க, தப்புன்னு நினைக்கிறேன்) தான் இந்த ஊரின் முக்கிய பூ போலும். அதை கலர் கலராக ப்ளாஸ்டிக், இரும்பு, தங்கம் என்று செய்து விற்கிறார்கள். பெண்கள் காதில் பூ வைப்பது தான் இந்த ஊர்க்(ஊரிலும்) கலாச்சாரமாம்! இடது காதில் வைத்தால் திருமணம் ஆன பெண், வலது காது என்றால் இன்னும் திருமணமாகாத பெண். கூந்தல் நடுவில் பூ வைத்துக் கொள்வது, குழப்புவதற்கான வழியாம்!
4.ஆவா அல்லது காவா என்று ஒரு பானம் - மெல்லிய போதை கொடுக்கும், relaxing பானமாம். ஆனால் இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். கொட்டாங்குச்சியில் ஊற்றித் தரும் இதை பொதுவாக யாராவது வீட்டுக்கு வந்தால் கொடுப்பார்களாம். ஆவா மர வேரிலிருந்து வருகிறது இது. எல்லா polynesian தீவுகளிலும் இது கிடைக்கும் போலிருக்கிறது.
5. அன்னாசி விளையும் செழிப்பான பூமி பக்கத்து லனாய்த் தீவில் இருக்கிறது. அது தவிரவும் இந்த ஒஆஹூவிலும் நிறைய அன்னாசி விளைகிறது. ஜேம்ஸ் டோல் வந்து இந்த அன்னாசிகளை அப்படியே mainlandஆன அமெரிக்காவுக்கு அனுப்பினால் கெட்டுப் போய்விடும் என்பதால் கேனில் போட்டு அனுப்ப வழி செய்திருக்கிறார். அமெரிக்காவின் Dole Pine Apple Juice பூராவும் இங்கிருந்து தான் செல்கிறது
6. அன்னாசியை மூலப் பொருளாக வைத்துச் செய்யும் Pina Colada என்னும் பானத்தை வைத்து நிறைய காக்டெய்ல்கள் செய்கிறார்கள். மாய்டாய் என்பது அவற்றில் முக்கியமான, famousஆன ஒன்று. ‘இங்க மட்டும் தான் கிடைக்கும், tropical drink’ என்று நன்றாகவே விளம்பரப்படுத்துகிறார்கள்.
7. ஹவாயின் மொழி மிகச் சுலபமான மொழி, a, e, i, o, u, மற்றும், ஏழு மெய்யெழுத்துக்கள். எல்லா இடங்களின் பெயரும் அதை ஒட்டித் தான் இருக்கின்றன. இந்தத் தீவுகளின் சரித்திரமும் அரசர்கள், மக்கள், சாதிப் பிரிவினைகள் என்று நம் வாழ்க்கை முறை போலத் தான் இருக்கின்றன. இந்தச் சரித்திரம் படித்துவிட்டு அடுத்தமுறை போக வேண்டும்…

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

RSS 2.0 | Trackback | Comment

4 Responses to “ஒஆஹூ - Paradise of America”


  1. ஒபாமாவுக்குப் போட்டியாப் போயிட்டீங்க போல. ஆனா உங்களை விடுமுறை எடுத்ததுக்கு யாரும் திட்ட மாட்டாங்க.

    ஜேம்ஸ் ஏ மிச்சனர் என்பவர் எழுதிய ஹவாயீ (அப்படித்தான் சொல்லணுமாமே) என்ற நாவலை நான் பரிந்துரை செய்கிறேன்.

    http://en.wikipedia.org/wiki/Hawaii_%28novel%29


  2. வாவ்! நல்ல டூர் போல இருக்கு.. ;-)
    காய் காய்க்காத தென்னை மரங்களா?.. :(


  3. ஹாய்! உங்க பதிவுகள் மிக நன்று! snorkling அந்தமான்ல பண்ணலாம்.நம்ம இந்தியாவில இருக்கிற அழகுத் தீவுகள்.பவளப்பாறை,பச்சை ஆமைகள்,இன்னும் நிறைய இருக்கிறது.

    http:andamantamizhosai.blogspot.com
    அன்புடன்
    க.நா.சாந்தி லெட்சுமணன்


  4. Very nice post. Am tempted to travel there after reading this.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>