Deprecated: Assigning the return value of new by reference is deprecated in /home/pookri/public_html/wp-includes/cache.php on line 36

Deprecated: Assigning the return value of new by reference is deprecated in /home/pookri/public_html/wp-includes/query.php on line 21

Deprecated: Assigning the return value of new by reference is deprecated in /home/pookri/public_html/wp-includes/theme.php on line 507
pookri.com

pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

Julie and Julia

திரைப்படம் பார்ப்பதே மறந்திருந்த வேளையில், வீட்டில் சமீபத்தில் டீவி தொடர்பு வாங்கியதால் இந்தப் படம் வரவேற்பறைக்கு வந்து அழைத்தது…

ஜூலியா சைல்ட் இரண்டாம் உலக யுத்தத்தில் எழுத்தராக பணியாற்றியவர். யுத்தத்துக்குப் பின்னர் கணவருடன் பாரிஸில் குடிபுகுந்த வேளையில், பிரஞ்சு சமையல் கற்று, எப்படி புத்தகம் எழுதப் புகுந்தார் என்பது ஒரு கதை. ஜூலி பொவல் 2002இல் ஜூலியாவின் இந்த பிரஞ்சு சமையற்குறிப்புகள் எல்லாவற்றையும் சமைத்து, முயன்று பார்த்து அது குறித்து வலைப்பதிவில் எழுதத் தொடங்குகிறார். இந்த செயல் எப்படி அவரை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக்குகிறது என்பது இரண்டாவது கதை.. இரண்டையும் சமமாக கலந்து சொல்லியிருப்பது திரைக்கதையின் அழகு.

ஜூலியா சமைப்பதும், புதிது புதிதாக கற்றுக் கொள்வதும், சமீப காலமாக புத்தகம் படித்துச் சமைக்கத் தொடங்கியிருக்கும் எனக்கு ரொம்பவும் சந்தோசமான ஒன்றாக இருந்தது. கொஞ்ச நாளாக, சமையலறைக்கு வெறும் சாப்பாடு நேரத்துக்கு மட்டும் வரப் பழகியிருக்கும் கணவரோ, ‘அட, உன்னை மாதிரியே ஒருத்தி புத்தகம் படிச்சி சமையல் பண்றா பாரு!’ என்று இப்பவரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜூலியாவாக நடித்திருக்கும் நடிகை மிக நன்றாக அந்தப் பாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டு, ‘நான் எப்படி வீட்ல சும்மா இருக்கிறது?’ என்று விதம் விதமான பயிற்சிப் பள்ளிகளுக்குப் போய் வந்து கொண்டு, ஆண்கள் கற்கும் சமையற்பள்ளியில் சேர்ந்து அவர்களுக்கு நிகராக சமைக்கப் போகிறேன் என்று, வீட்டிலிருக்கும் எல்லா வெங்காயத்தையும் வெட்டிக் கொண்டு, குழந்தைத்தனமும், குதூகலமும் கலந்து விளையாடுகிறார். அவரின் முதல புத்தகம் எப்படி அச்சுக்கு வந்தது, அதற்கு என்னவெல்லாம் பாடுபட்டார் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஜூலியாவிற்குமுன் இது போல ஆங்கிலத்தில் பிரஞ்சு சமையல் பற்றி எல்லாருக்கும் புரியும் விதமான ஜனரஞ்சகமான புத்தகம் இருக்கவில்லையாம்.

சமீபத்தில் ஜூலியா சமையல் புத்தகம் எழுதிய கதையான ‘My life in France’ ஐயும் படிக்க கிடைத்தது. அந்த காலத்து பிரான்சு எப்படி இருந்தது என்று அழகாக விவரிக்கிறார் ஜூலியா. படிக்கும்போது, 1950களின் பாரிஸ் நம்ம கோயம்பேடு மார்க்கெட்டை நினைவுப் படுத்துகிறது. ஆங்காங்கே அண்ணாச்சி கடைகளும், பொருட்களைப் பார்த்து வாங்க முடியும் விதமும், அதே 50, 60களின் அமெரிக்காவிலோ, சூப்பர்மார்க்கெட்களும் என்று அந்த வித்தியாசங்களை அழகாக காட்டி இருக்கிறார் ஜூலியா. வேட்டைகாலத்தின் போது, Quail என்ற பறவை பாரிஸ் மார்க்கெட் எங்கும் நிறைந்திருக்குமாம். ஆனால், அதனை அப்படியே, வேட்டையாடிய மாதிரியே கொண்டு வந்து கொட்டி விற்பார்களாம்! (அப்ப தான் அடையாளம் தெரியும், அதன் இறகு நிறம் பார்த்து மக்கள் வாங்குவார்களாம்!) அதே சமயம் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் குயில்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டு, குயிலா கோழிக்குஞ்சா என்று அடையாளம் தெரியாதபடி தோலுரிக்கப்பட்டு விற்கப்படுமாம்! இன்னும் ஒவ்வொரு கடையையும், எப்படி சீஸ் வாங்க வேண்டும், எப்படி ஆலிவ் எண்ணெய் வாங்க என்று ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் காட்டுகிறார் ஜூலியா.

இத்தோடு, பாரிஸில் அந்தக் காலத்தில் வீட்டு வேலைக்கு ஆள் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். ஜூலியா வீட்டுக்கே, வாடகைக்கு வீடு எடுத்த போது கூட ஒரு வேலைக்காரியையும் கொடுத்தார்களாம்! அவருக்கும் சாப்பாடு சேர்த்துப் போட வேண்டியது வாடகைக்கு இருப்பவர்களின் கடமையாம். அதே 50-60களில் அமெரிக்காவிலோ, உதவிக்கு ஆள் இல்லாத இல்லத்தரசிகள் தான் அதிகமாம் (அதாவது, ஜூலியா பிறந்த கலிபோர்னியா மாகணத்திலும், புகுந்த வீடான பாஸ்டனிலும் உதவிக்கு 50-60களில் ஆள் கிடையாது.. மற்றபடி தென்மாகாணங்களில் அடிமைகளை நன்கு பிழிந்து கொண்டு தான் இருந்தார்கள்!)

ஜூலியை 2002இல் நியூயார்க் நகரத்தில் வாழும் பெண். கல்லூரிக் காலங்களில் புகழ் பெற்ற எழுத்தாளராக வேண்டும் என்ற அவளின் லட்சியம் வெற்றிபெறாமல், முப்பது வயதில் ஏதோ பிடிக்காத வேலையில் (911இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கால் சென்டர்) உட்கார்ந்து கொண்டு வாழ்க்கையைக் கொஞ்சமேனும் சுவாரசியமாக்க வேண்டும் என்ற காரணத்துக்காக சமையல் செய்பவள். 2002களின் சூப்பர் மார்க்கெட் கலாசாரம், தேவையில்லாத பகட்டான நட்புகள், என்று இன்றைய நடுத்தர அமெரிக்க குடிமகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அடிக்கடி போன் செய்து, ‘நீ எழுதுற ப்ளாக்கை எவனும் படிக்கிறதில்லை.. இது தேவையில்லாத வேலை’ என்று பேசிக் கொண்டே இருக்கும் (முகம் காட்டாத) அம்மா கதாபாத்திரம் அழகு.

இத்தோடு இந்தப் படத்தை ஒரு பத்து முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அலுப்பு தட்டவே இல்லை! சொல்லப் போனால் ஜூலியாவின் மூல புத்தகத்தைப் படித்த பின்னர், படத்தில் வழக்கம் போல பல விசயங்கள் மாறி வருவது வியப்பாக இருக்கிறது.

முதல் தரம் படம் பார்த்து முடித்த பின்னர், அது வரை மீனாட்சி அம்மாள் மட்டுமே வைத்து சமைத்துக் கொண்டிருந்த நான், அடுத்து ஜூலியாவின் சமையற்குறிப்புகளில், நம்ம சமைக்கக் கூடியதாக ஏதாவது சிக்குகிறதா என்று பார்க்கத் தொடங்கிவிட்டேன்! பாவம் ரங்ஸ் ;-)

மீண்டும் பதிவுகளுக்கு வர - புதிதாக இப்படி சமையல் பதிவு போடத் தொடங்கலாமா என்று ஒரு ரோசனை வேறு.. ஜாக்கிரதை மக்கள்ஸ் :-)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

1 Comment
taintedsong.com taintedsong.com taintedsong.com

போர்க்கதைகள் - 2

The Bookseller of Kabul (by Asne Seirstad) & Thousand Spendid Sons (by Khaled Hosseni)

கலீத் ஹோசினியின் மற்றொரு புத்தகமான The Kite Runner படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து சீட்டுப் பயணி ஒருவர் The Thousand Splendid Sons படிக்கச் சொன்னார். ‘கைட் ரன்னர் அப்கான் ஆண்களைப் பற்றியது என்றால், ஸ்பெளிண்டிட் சன்ஸ், பெண்களைப் பற்றிய கதை, உனக்குப் பிடிக்கும்’ என்றார் அவர். உண்மை தான். கைட் ரன்னர் படித்த போது, அப்கானின் அரசியல் வாழ்முறை பற்றி இதில் ஒன்றுமே இல்லையே என்று நான் வியந்ததற்குப் பொருத்தமாக இந்தப் புத்தகம் ஒரு அரசியல் விருந்து.

ஒவ்வொரு பத்து வருடமும் ஆட்சியும் - அத்துடன் கூட ஆட்சி புரியும் விதமுமே - மாறும் அப்கான் நாட்டின் இரண்டு பெண்களைப் பற்றிய கதை இது. 70களில் தொடங்கி அப்கானிய கிராமங்கள், காபூல் என்று வலம் வருகிறது. பெண்கள் இரண்டு பேரும் வயது, வளர்ந்த விதம், பெற்றோர் என்று எல்லாவற்றிலுமே வித்தியாசம் இருந்தாலும், எப்படி ஒரே வீட்டில், ஒரே நரகத்தில் கஷ்டப்பட்டு காலம் கழிக்கிறார்கள் என்று விளக்குகிறது கதை. கொஞ்சம் முற்போக்கான பெற்றோருக்கு மகள் லைலா, முறைகேடான உறவில் பிறந்து குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப் பட்டவள் மரியம் - சோவியத் ஆண்ட நாளில் கிடைத்த கொஞ்சம் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் இருவரும் எப்படிப் பயன்படுத்தினர் என்று காட்டி இரு வேறு அப்கான் மக்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் கதை, அதன்பின் தாலிபன் காலத்தில் இருவரும் ஒன்றாக புர்க்காவுக்குள் மறைந்து, வெளியே போகவும் முடியாமல் பாடுபடுவதை அழகாக படம்பிடிக்கிறது.

தாலிபான் அப்கான் விட்டுச் சென்ற பின், அத்தனை கொடுமை அனுபவித்த அந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று போரால் அனாதையான குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்று தாய்நாடு திரும்பும் லைலா, நம்ப முடியாத முன்னுதாரணம்!

அரசியல் வாழ்க்கை பற்றிய கதை அது என்றால், The bookseller of Kabul, ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை. 2001க்குப் பிறகு, தாலிபான் ஆட்சிக்குப் பிறகான அப்கானின் ஒரு சின்ன குடும்பத்தைப் பற்றிய கதை. எழுத்தாளர் அஸ்னி, தானே சென்று, சுல்தான் கான் என்னும் நடுத்தர அப்கான் குடும்பத்தில், அந்தக் குடும்பத்துப் பெண்ணாக சில காலம் வாழ்ந்த கதை! சுல்தான் என்னதான் புத்தகங்கள் படித்தாலும், பொதுவாக அவனின் மற்ற சகோதர சகோதரியருக்குக் கிடைக்காத படிப்பு என்னும் பொக்கிஷம் அவனுக்கு கிடைத்த போதும், அதன் அருமை புரியாதவனாகவே இருக்கிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பணம், பணம் மேலும் பணம் தான்.

என்ன தான் சுதந்திர நாடு என்றாலும், எப்படி இன்னமும் அப்கான் பெண்களுக்கு, தத்தம் வாழ்க்கையை முடிவெடுக்க தெரியவில்லை என்று காட்டுகிறார் அஸ்னி. பெண்கேட்டு வந்தால், சரி என்றோ இல்லை என்றோ சொல்ல பெண்களுக்கு உரிமை இல்லை. திருமண நாள் வரை கணவன் முகத்தைப் பார்க்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. இன்னும், எத்தனையோ இல்லைகள்.., ஆனால், அதிசயமான விசயம் என்னவென்றால், பெண்கேட்டு வரும் ஆண் வீட்டார் தான் வரதட்சணை கொடுத்து, திருமணத்தையும் நடத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வரதட்சணைக்குத் தக்க பெண்ணின் பெற்றோர் ஒப்புதல் சொல்லலாம். இதனால் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் கொண்டாடப் படுகிறார்களா, என்றால், ‘இல்லை’! அப்கானிலும், பெண்ணைப் பெறுவது பெருமைக்குரியதில்லை!

தாலிபான் போன பின், பெண்கள் வேலைக்குப் போகலாம். ஆனால் யார் வேலை செய்யலாம், யார் செய்யக் கூடாது என்று முடிவெடுப்பவர்கள், அந்தப் பெண்ணின் கணவன், அவளின் முதல் மகன், ஏன், தன் அத்தை வேலைக்குப் போவதைக் கூட குடும்பத்தின் முதல் மருமகனால் தடை செய்ய முடியும்! என்னதான் பணம் இருந்தாலும், சுல்தான் கானின் குடும்பம் 90களின் இந்தியா போல, செலவு செய்யாத ‘நடுத்தர குடும்பம்’

ஆங்காங்கே கதை, கட்டுரை மாதிரி, சம்பவத் தொகுப்பு மாதிரி இருந்தாலும், அதிகம் கற்பனைக் கலப்பில்லாமல், அஸ்னி 2003களின் அப்கானிய வாழ்க்கையை எடுத்துக் காட்ட முயன்றிருக்கிறார். இது ஒரு நடுத்தர வர்க்க, அதிசயமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த சிலரைக் கொண்ட குடும்பம்.

என் தாய்நாட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும், கிட்டத் தட்ட பாதி இந்தியர்கள் சாப்பிடுவது போன்ற உணவைச் சாப்பிடும், பாதி இந்தியர்கள் வணங்கும் கடவுளை வணங்கும், இந்தச் சிறிய நாடு, இன்னுமும் இவ்வளவு பழங்காலக் கொள்கைகளில் இருப்பதை என்னால் முதலில் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்கான் பற்றிய கதைகள் எப்போதுமே மதவெறுப்போது முன்வைக்கப் பட்டு படித்ததால், இது போன்ற நடுநிலையான கட்டுரையைக் கவனிக்காமலிருக்க முடியவில்லை.

கதையின் பின்இணைப்பாக அஸ்னி சொல்கிறார், ‘அப்கானில் இருந்த போது, நானும் சுல்தான் வீட்டுப் பெண்களைப் போன்றே இருக்க முயற்சித்தேன். அவர்களைப் போலவே புர்க்கா உடுத்தி வெளியே சென்று வந்தேன். அவர்கள் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தேன். அதனால், இன்று என்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த பின் என்னுடைய இந்தச் சுதந்திரத்தை இன்னும் அதிகமாக அனுபவிக்கவும், போற்றவும் முடிகிறது ‘ எத்தனை சத்தியமான வார்த்தை!

என்னுடன் ஓட வரும் சில தோழிகள், சவுதியில் வளர்ந்தவர்கள். ஹைஸ்கூல் படிக்கும்போது அவர்கள் இந்தியாவில் சில வருடங்கள் இருக்க நேர்ந்தது. முதல் வருடம் அவர்களின் பிரச்சனைகளை நினைவு கூறும்போது, ‘முதன்முதலில் புர்க்கா இல்லாமல் வெறும் சுடிதாரில் வெளியே சென்று வருவது கொடுமையாக இருந்தது. ஒன்றுமே அணியாமல் வெளியே செல்வது போன்ற கூச்சம்! உடன் படிக்கும் ஆண்கள் திரும்பிப் பார்த்தால் கூட என்ன இந்தியர்கள் இவ்வளவு அநாகரிகமாக கூடப் படிக்கும் பெண்ணைப் பார்க்கிறார்கள் என்று தோன்றும். அப்பா இல்லாமல் பள்ளிக்குச் சொந்தமாக பஸ் பிடித்துப் போக நேர்ந்தது ரொம்பவே கொடுமை! அதிலும் உங்க ஊரில் பஸ் இரண்டு தெரு தள்ளி நிற்கிறது. சவுதியில் எல்லாம், வீட்டு வாசலுக்கு வந்து அழைத்துச் செல்வார்கள். இந்த இரண்டு தெரு தனியா நடக்கவேண்டிய அவசியமே இல்லை! உடன் வர ஆண்கள் இல்லாமல், சொந்தமாகப் போய் வரும் பயமெல்லாம் போகவே ஒரு வருடம் ஆனது’ என்றார்கள். (இன்று அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்கள், திரும்ப சவுதிக்குப் போகும் எண்ணமே இல்லை)

ஒன்பதாவது படிக்கும் பெண், துணைக்கு ஆண் இல்லாமல் போய் வர கஷ்டப்பட்டுப் பழகியதைக் கேட்ட போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பக்கத்துத் தெருவுக்கு நடந்து போய் படிக்கப் பழக்கிய என் தந்தையும் தாயும், அதற்கு வழி வகுக்கும்படியான இருபதாம் நூற்றாண்டு இந்தியாவும், பற்றி ஒரு பெருமை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.. இது போன்ற கதைகளைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், என்னுடைய சுதந்திரத்தை இன்னும் அதிகமாக பாராட்ட முடிகிறது!

அப்கான் பெண்களின் நிலையும் சீக்கிரமே நல்ல விதமாக உயர அல்லா காப்பாற்றுவராக!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

1 Comment
taintedsong.com taintedsong.com taintedsong.com

போர்க் கதைகள்..

சாண்டில்யன் நாவல்கள் படித்த காலத்திலிருந்தே போர்க்கதைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். போர் பற்றிய எந்தக் கதையாக இருந்தாலும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவேன். ஆங்கிலக் கதைகள் படிக்கத் தொடங்கியதிலிருந்து உலகப் போர் பற்றிய கதைகள் தேடிப் படித்திருக்கிறேன். அதிலும் இரண்டாம் உலகப் போர் குறித்துத் தான் எத்தனை கதைகள்?! இரண்டாம் உலகப் போரைப் பொறுத்தவரை, ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், ஆஸ்திரியர்கள், போலந்து மக்கள், பின்லாந்து மக்கள் என்று பல்வேறு மக்களின் பார்வையில் இரண்டாம் உலகப் போர்க் கதைகள் படித்திருக்கிறேன். ஆனால், ரஷ்யர்கள் இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப் பட்டார்கள் என்று எண்ணியதே கிடையாது.

சோவியத் ரஷ்யாவின் வரலாற்றை கம்யூனிசம் விரும்புபவர்கள், கம்யூனிசம் விரும்பாதவர்கள் என்ற இரண்டே நிறங்களில் தான் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறேன். மூன்றாதாக ஒரு பக்கம் உண்டு - அது சோவியத் ரஷ்யாவில் பிறந்து, வளர்ந்து, அரசியல் சார்பற்ற சாதாரணப் பெண்ணின் கண்களில் இருக்கிறது என்று முதன்முறையாக உணர்ந்தது - கிறிஸ்டின் ஹன்னாவின் The Winter Garden படித்த போது தான்! சரியாக நான்கு நாட்களில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன்! சிட்னி ஷெல்டனுக்குப் பின், என்னை இரவெல்லாம் கண்விழித்துப் படிக்க வைத்த கதையாசிரியர் ஹன்னா!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் செய்த மிகப் பெரிய தவறு, லெனின்கிராடை முற்றுகை இட்டது தான். அந்த நான்கு வருட முற்றுகையின் முடிவில், ஜெர்மானியப் படை குளிர் ஜுரம், கடுங்குளிர் இவற்றைத் தாங்க முடியாமல் பின்வாங்கி அழந்துபட்டது என்று என்னுடைய ஒன்பதாம் வகுப்பு சரித்திர புத்தகம் சொன்ன லெனின்கிராட் தான் எனக்குத் தெரியும். ஆனால், The Winter Garden இன் கதாநாயகி, சாதாரண குடிமகள் அன்யா என்னும் வெரொனிகா காட்டும் லெனின்கிராட், இன்னும் பரிதாபமானது.

அன்யா, ஆப்பிள்களுக்குப் பெயர் போன வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு ஆப்பிள் தோப்பு முதலாளியின் அமைதியான மனைவி. அமைதி என்றால், அப்படி ஒரு அமைதி. தன் சொந்த மகள்களுடனேயே பேச மறுக்கும் அமைதி. அம்மாவின் பிறந்த நாள் கூட அறியாமல் வளரும் மகள்கள். பெரியவள் கணவர், குடும்பத்துடன் ஆப்பிள் தோட்டத்துக்கு அருகிலேயே, அப்பாவுக்கு உதவியாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். சின்னவள், அம்மாவின் புறக்கணிப்பு தாங்காமல், உலகத்தில் போர் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் பறந்து போட்டோ பிடிப்பதைத் தொழிலாக்கிக் கொண்டு அலைகிறாள். அப்பா இறக்கும் போது, மகள்களுக்கும், மனைவிக்குமிடையில், இத்தனை பெரிய இடைவெளி இருப்பதை அவரால் தாங்க முடியாமல், அம்மாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று இளைய மகளிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு இறக்கிறார்.

ஆறு மாதத்திற்குப் பின், அன்யா, இளைய மகளின் தூண்டுதலின் பேரில் மெல்ல பேசத் துவங்கும்போது தான் வெரா வெளியே வருகிறாள். ‘ஸ்டாலினின் ரஷ்யாவில், அம்மா, அப்பா, தங்கை ஓல்காவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் வெரா. பதினாறு வயதில் தன்னுடைய அன்புக்குரிய இளவரசனை அவள் சந்திக்கும் நாளில், அவளுடைய தந்தையை அரசாங்க கைதியாகச் சிறைபிடித்துப் போகின்றனர். அத்துடன் தந்தை பெட்ராவின் உடலைக் கூட மீண்டும் பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. குடும்பத்தலைவரை இழந்தபின், மற்ற பெண்கள் அனைவரும் வேலை பார்த்து தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப் படுகின்றனர். அம்மா, ரொட்டித் தொழிற்சாலைக்கும், வெரா புத்தகசாலைக்கும், ஓல்கா மியூசியத்துக்கும் வேலைக்குப் போகிறார்கள். கல்லூரிக்குப் போய், தந்தையைப் போன்று கவிதை படிக்க வேண்டும் என்ற வெராவின் கனவுகள் சின்னாபின்னமாகின்றன. அப்பாவுடன் வசித்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், அம்மாவின் அம்மா வீட்டுக்கு இடம் மாறி வருகின்றனர். அம்மா-அப்பாவின் காதலை எதிர்த்த பாட்டி முன்னால், அப்பா பற்றிப் பேசும் உரிமை கூட இல்லாமல் போகிறது.

நாட்டின் criminalஇன் மகள் என்ற முறையில், தன் தாய்நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டி இன்னும் இன்னும் அதிக வேலை பார்க்க வேண்டி வருகிறது வெராவுக்கு. யாரிடமும் பேசாமல், அறிவுப் பசிக்கு வேண்டிய தீனி கிடைக்காமல், வெரா சோர்ந்திருக்கும்போது, அவளுடைய இளவரசனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இளவரசன் சாஷாவின் குடும்பத்தினர் அனைவரும் ஏற்கனவே ஸ்டாலினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். சாஷாவுக்கும் வெராவுக்குமான தூய்மையான காதலை அங்கீகரிக்கும் வெராவின் தாய், சாஷா கவிதை படிக்கக் கூடாது என்ற வாக்குறுதியின் பேரில், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய ஒப்புகிறாள். இருபது வயதுக்குள், அன்யா (மகள்), லியோ (மகன்) என்ற இரண்டு செல்வங்களைப் பெற்றெடுக்கிறாள் வெரா.

அதுவரை வசந்த காலமாக இருந்த வாழ்க்கையில் புயல் வீசும் விதமாக போர் வருகிறது. ஜெர்மானியப் படைகள் லெனின்கிராடை முற்றுகை இட்ட நாள் முதல், எல்லாருக்கும் உணவு ரேசன் அளவு குறைகிறது. வேலைக்குப் போகாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அளவு மிக மிகக் குறைவு. வங்கியில் பணம் இருந்தும் எடுக்க முடியாது தடை செய்யப் படுகிறது. சாஷா உள்ளிட்ட எல்லா ஆண்களும் போர்முனைக்குக் கிளம்பிப் போகிறார்கள். சில நாள் கழித்து, ஸ்டாலினின் ஆணையின் பேரில், குழந்தைகள் எல்லாரையும் ரயிலில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி நடக்கிறது. பிள்ளைகளைப் பிரிய முடியாத வெராவும், தன் குழந்தைகளோடு கூடப் போகிறாள், பாதி வழியில் அந்த ரயிலை எதிரிகள் தாக்க அதிர்ந்து போய், தன்னால் முடிந்த அளவு பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு லெனின்கிராட் திரும்புகிறாள். கொஞ்ச நாள் கழித்து, அடுத்த அழைப்பு நகரத்தின் இளம்பெண்களுக்கு வருகிறது. வெராவும், ஓல்காவும், மற்ற பெண்களோடு லூகா நதியின் எல்லைக்குச் சென்று, நாள் முழுக்க மண்ணை நோண்டி குழிகள் உருவாக்குகிறார்கள். இதன் மூலம் எதிரிகள் அந்த பக்கத்திலிருந்து உள்ளே வருவதைத் தவிர்க்கும் வழி இது. எல்லா முக்கிய போர்க்கருவிகளையும் ஆண்கள் எடுத்துச் சென்றுவிட்டதால், வெறும், கம்பு, கரண்டி, நகம், கை என்று நோண்டும் இந்தப் பெண்களை நிறுத்த ஜெர்மானியப் படை குண்டு போடுகிறது. குண்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஓடி ஓடி ஒளிந்து கொண்டாலும், மீண்டும் மீண்டும் வந்து தோண்டுகிறார்கள் பெண்கள். ஒரு சில மாதங்களுக்குள்ளேயே ஓல்கா சோர்ந்து விடுகிறாள். உணவு உண்ணவும் வருவதில்லை, தன்னையொத்த பெண்கள் தன்னருகிலேயே இறப்பது பார்த்து அவளின் மனம் சோர்ந்து போகிறாள். அடுத்த ஒரு சில நாட்களில் பைத்தியம் மாதிரி, குண்டு பற்றிய எச்சரிக்கையை அவமதித்து, ஓடி மறையாமல், குண்டடிபட்டு இறந்து போகிறாள்.

குளிர்காலம் வந்து, இனி நோண்ட மண் இடம் கொடுக்காது என்ற போது, வெரா தனியாக வீட்டுக்கு வருகிறாள். அம்மாவுக்கு உடனே புரிந்து போகிறது, ‘சித்தி எங்கே?’ என்று கேட்டு பிள்ளைகள் தான் அழுதழது மாய்ந்து போகிறார்கள். ஜெர்மானிய முற்றுகையின் முதல் குளிர்காலம் மிகக் கொடுமையாக நகர்கிறது. உணவு ரேசன் இன்னும் குறைந்து போகிறது. கிடைக்கும் சிறதளவு பிரட் கூட மரத்துகள், கொள்ளு, போன்ற மனிதர் உண்ணத் தகுதியில்லாத பொருட்கள் நிறைந்து இருக்கிறது. டிசம்பர் தொடங்கிய போது, நீருக்கு வழியில்லாது போகிறது. வெரா வெகுதூரம் சென்று, உறைந்திருக்கும் தண்ணீரை எடுத்து வருகிறாள். கொஞ்ச நாளில் நகரப் போக்குவரத்து நின்று விட்டது. வேலைக்கும் எல்லோரும் நடந்து தான் போக வேண்டும். நகரின் பிரபலமான பிரட் கிடங்கில் வேலை செய்யும் பாட்டியும் அம்மாவும் அவ்வப்போது ஏதாவது திருடி வருவதை வைத்துத் தான் குழந்தைகள் உடல் நலத்தைப் பேண வேண்டி இருக்கிறது. எதிரியின் குண்டு விழுவது மட்டும் இன்னும் நின்ற பாடில்லை. வெராவின் வீட்டில் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தால், பக்கத்து வீட்டு பதுங்கு குழிக்குத் தான் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. வெரா, அவள் வயதை ஒத்த மற்ற பெண்களைப் போல, குண்டு விழும் போது, கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகாமல் பாதுகாக்கும் ரோந்து வேலையிலும் இருக்கிறாள். ஒருமுறை குண்டு விழும்போது அவள் விரைந்து சென்று நெருப்பை அணைத்ததால், அவளின் வீட்டைக் காப்பாற்ற முடிகிறது, ஆனால் அந்தக் குண்டு அவளின் பாட்டி வேலை செய்து கொண்டிருந்த பிரட் தொழிற்சாலையில் விழுந்து அவர்கள் வீட்டு உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

ஜனவரி தொடங்கும்போது, அம்மா மொத்தமாக படுத்த படுக்கையாகிவிட்டார். குழந்தைகள் பாதியாக இளைத்துவிட்டனர். குளிரில் உறைந்து இறக்காமல் இருக்க, வீட்டின் ஒவ்வொரு மரச் சாமானாக அடுப்புக்குப் போகிறது. அப்பாவுக்குப் பிடித்தமான புத்தகங்களில் பாதி நெருப்புக்கு இறையாகிவிட்டது. உணவு என்று சாப்பிடவது, வெறும் மரத்தூள், அவ்வப்போது ஒரு உருளைக்கிழங்கு, ஏன் ஒருதரம், அவர்கள் பேப்பர் சூப் கூட குடித்திருக்கிறார்கள். பெரியவள் அன்யா அம்மாவின் கஷ்டம் உணர்ந்து எதையாவது சாப்பிட்டு விடுவாள். சின்னவன் லியோ தான், சாப்பிட மறுப்பான். வெரா லைப்ரரிக்குச் சென்று வரும் அந்தச் சில மணி நேரம் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதே, கடினமான வேலையாக இருக்கிறது அம்மாவுக்கு. அம்மா இப்போதெல்லாம் சாப்பிடுவதே இல்லை- சாப்பிட முடிவதில்லை என்பது ஒரு காரணம் என்றால், இருக்கும் கொஞ்சம் உணவில், தனக்கும் பங்கு வைக்கச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை போல. வெராவால் குழந்தைகளா, அம்மாவா என்ற கேள்விக்கு உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் வெரா மார்க்கெட்டுக்குப் போவதே இல்லை. அங்கே போய் உணவு வாங்கி வர அவளிடம் ஏது பணம்? அத்தோடு, இப்போதெல்லாம் மார்க்கெட்டில் மனித மாமிசம் வேறு கிடைக்கிறதாம்! கேட்கவே பயங்கரமாக இருந்தது வெராவுக்கு. ஒரு இரவு அவள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம். அவளைப் பார்க்க யார் வரப் போகிறார்கள்? பயந்து கொண்டே கதவைத் திறந்து பார்த்தால், சாஷா! வெராவுக்கு உயிர் திரும்பியது மாதிரி இருந்தது. சாஷா ஒரு நாள் அவளையும் அவள் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டான். எல்லாருக்கும் ஊரை விட்டு வெளியேற வழி செய்து கொண்டிருப்பதாயும், அவள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கினான். சாஷாவைப் பார்த்த நிம்மதியிலேயே அம்மாவின் உயிர் போய்விட்டது. அம்மாவைப் புதைக்க சாஷா உதவி செய்தான். இருவருமாக அம்மாவை இடுகாட்டுக்கு இழுத்துப் போகும் வழியெங்கும் குளிரிலும், பசியிலும் இறந்து போன உடல்கள்! தோண்டக் கூட முடியாத உறைந்து போன பூமி! மற்றவர்கள் போல, இடுகாட்டில் அந்த உடலை அப்படியே போட்டுவிட்டுப் போக மனமில்லாமல் ஒரு பெரிய மரத்தடியில் இலைகளுக்கு இடையில் அம்மாவைப் புதைத்துவிட்டு வருகிறார்கள் சாஷாவும் வெராவும்!

சாஷா மீண்டும் போர் நடக்கும் எல்லைப் புறத்துக்குப் போய் நால்வருக்கும் நாட்டை விட்டு வெளியேற வழிசெய்யப் போகிறான். இன்னும் சில வாரம் தனியாக - இந்த முறை அம்மாவின் துணையும் இல்லாமல் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வெரா துணிகிறாள். லியோவுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. வெரா குழந்தையைத் தூக்கும் சக்தியற்று பிள்ளைகள் விளையாடும் தள்ளுவண்டியில் லியோவைக் கட்டி ஆஸ்பத்திரிக்கு இழுத்துப் போகிறாள். டாக்டரைப் பார்க்க பெரிய வரிசை நிற்கிறது, சொல்லப் போனால் சிலர் அந்த வரிசையில் இறந்தே போயிருக்கிறார்கள்! ஏதோ ஒரு நர்ஸ் லியோவைப் பார்த்து மருந்து எழுதிக்கொடுக்கிறாள். ‘பெயர் என்ன?’ என்கிறாள் - ‘லியோ’ என்கிறாள் வெரா. ‘என் மகன் —– என்று இருந்தான்’ என்கிறாள் அந்த நர்ஸ் - கடைசியாக மிச்சமிருப்பது அந்தப் பெயர் மட்டும்தான் என்பது போல!

எல்லா உணவும் தீர்ந்து போய் கடைசி பிரட் துண்டத்தை மூன்றாகப் பங்கிட்டு சாப்பிட்ட அன்று வெராவுக்கு எல்லா நம்பிக்கையும் செத்துப் போகிறது. பசியையும் அடுத்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற பயத்தையும் வெற்றி கொள்ள கவிதை எழுதுகிறாள். அப்பாவின் கவிதைப் புத்தகத்தில் மிச்சமிருக்கும் பக்கத்தில் அவள் எழுதிக் கொண்டே இருக்கும்போது, சாஷாவிடமிருந்து தகவல் வருகிறது - அவர்களுக்கான பயணக் கடிதங்களுடன் ஒரே ஒரு sausage துண்டத்தையும் பதுக்கி அனுப்பி இருக்கிறான் சாஷா. செய்தி எடுத்துவந்த பக்கத்து வீட்டு இளைஞன், அன்று இரவு மீண்டும் வந்து கதவைத் தட்டுகிறான். குழப்பத்தோடு கதவு திறந்த வெராவுக்கு அவன் கையில் இருந்த வாட்காவும் பிரட்டும் ஆச்சரியமூட்டுகிறது. அவன் தாயார் இரவு தாங்க மாட்டார்கள் என்று எண்ணுவுதாகவும், அதனால் வெராவுக்கு அவளுடைய ரேசனான அந்த உணவைக் கொடுக்குமாறு அவள் சொன்னதாகவும் அவன் சொல்கிறான். வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல், வாங்கிக் கொள்கிறாள் வெரா. அவனுக்கும் சாஷா போன்ற போர்வீரர்களுக்கும் அரசாங்கம் போரிடப் போதுமான உணவு கொடுப்பார்கள். அவள் போன்ற குடிமக்களுக்குத் தான் ரேசன்!

அன்று வெரா தன் வாழ்நாளின் நெடிய பயணத்துக்குத் தயாராகிறாள். வீட்டில் எரியாமல், விற்காமல், சாப்பிடாமல், மிச்சமிருக்கும் எல்லா பொருட்களையும் சேர்த்தாலும் சின்ன பையில் நிரம்பி விடுகிறது. உணவையும், தந்தையின் கவிதைப்புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு பிள்ளைகளுடன் கிளம்புகிறாள். பாதி வழி செல்கையில் பிள்ளை லியோ ‘பசி, பசி’ என்று அழுதபடி உறங்கிவிடுகிறான். பசித்த மனிதர்கள் நிறைந்திருக்கும் ரயிலில் அந்த ஒரு மாமிசத் துண்டத்துக்காகவே அவளைக் கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?! ஒரு நாள் பயணத்தில் அவர்கள் வந்திறங்கிய போது லியோ கண்திறக்க மறுக்கிறான். வெரா பயந்து போய் அடுத்த ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாள். ஆஸ்பத்திரியில் அவன் இரண்டு மூன்று நாள் தாங்க மாட்டான் என்கிறார்கள். அடுத்த நாளே தான் பயணப்பட வேண்டும் என்று வெரா சொல்லும்போது, ‘இது போன்ற தேறாத கேஸ்களை நாட்டைவிட்டு அனுப்ப அனுமதிக்க மாட்டார்கள்’ என்கிறாள் அந்த நர்ஸ். ஒரு இரவுக்குப் பின் அதே நர்ஸ், ‘இவனைப் பிழைக்க வைக்க எங்களால் ஆகாது, ஆனால், இப்போது நீ போனால், இவளைக் காப்பாற்றலாம்’ என்று அன்யாவைக் காட்டுகிறாள். வெரா ஒரு உறுதியோடு அன்யாவை மட்டும் ரயிலேற்றி, அவளின் தந்தையிடம் அனுப்பி விடுகிறாள். அடுத்த நாள் லியோ இறந்து விடுகிறான் - scurvy - என்கிறார்கள்.

வெரா தாள முடியாத துயரத்தோடு கணவரிடம் போக ரயிலேறுகிறாள். வண்டி நின்றதும், அவளின் எஞ்சிய இரு கண்களான சாஷாவும் அன்யாவும் வரி வடிவமாகத் தெரிகிறார்கள். அவள் வேகமாக அவர்களிடம் ஓடும் போது ரயில் பாதையில் இருந்த குண்டு வெடிக்கிறது. அத்தோடு எல்லாரும் தனித் தனியாக சிதறுகிறார்கள். வெரா உயிர் பிழைத்து, எழும்போது அவள் ரயிலடியில் ஒரு சிகிச்சை முகாமில் இருக்கிறாள். அவளைத் தவிர ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று அறிகிறாள். அத்தோடு அன்யா அணிந்திருந்த ஸ்வெட்டரின் ஒரு சின்ன பகுதி அவள் கைக்குக் கிடைக்கிறது. வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையை இழந்தபோதும் வெராவால் உயிரை மாய்த்துக் கொள்ள முடியவில்லை. ஜெர்மானியப் படையால் சிறைபிடிக்கப்படும் அவளை இவான் என்னும் அமெரிக்கர் கண்டெடுத்து, விரும்பி மணம் புரிந்து அமெரிக்கா அழைத்து வருகிறார்.’

அன்யா என்று தன் மகளின் பெயரைச் சூட்டிக் கொண்டு அமெரிக்கா வந்த வெரொனிகாவின் கதை அவளின் மகள்களின் மனநிலையை எப்படி மாற்றுகிறது, வெராவின் உயிரான அன்யா பிழைத்து வந்து அம்மாவைச் சந்திப்பது என்று கதை நல்ல மகிழ்ச்சியான விதமாக முடிகிறது.

புத்தகம் படித்து முடித்த முதல் ஒரு வாரம் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், வெளியே நடந்து போனால் ஒருவேளை கதையில் வந்தது போல் குளிரில் உறைந்த உடல்கள் இருக்குமோ என்னும் அளவுக்கு என்னைப் பாதித்து விட்டது. Holocaust Surviver என்பார்கள் - இந்த siege of Leningrad Survivorகளும் அது போன்ற ஒரு extreme துன்பங்கள் பட்டவர்கள் தான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாமல், பேப்பரைச் சுரண்டி தின்பது என்றால்?! அப்பா!! படிக்கவே பயங்கரமாக இருக்கிறதே! லெனின்கிராட் முற்றுகையின் முதல் பனிக்காலத்தில் தான் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரை விட்டார்களாம் - குளிர், பசி, scurvy இவை தான் முக்கிய காரணங்களாம்! முதல் பனிக்காலத்தில் பிழைத்த ஒவ்வொருவரும், உயிருடன் இருக்கக் காரணம் மற்ற இரண்டு பேரின் தியாகத்தால் தானாம் - வெராவின் அன்னை போல, பக்கத்து வீட்டுப் பையனின் அன்னை போல, கடைசி சாப்பாட்டைத் துறந்தவர்கள் பலர் உண்டாம். நிஜமாகவே - அந்த முதல் குளிர் காலத்தில் - இறந்த மனிதரின் மாமிசத்தைக் கூட சமைத்துச் சாப்பிட்ட காட்டுமிராண்டித்தனம், நகரத்தின் சில இடங்களில் இருந்ததுவாம்! வெரா போல தப்பித்தவர்கள் நிறைய பேர். அப்படி நகரத்தை விட்டுப் பிரியாமல் இருந்த சிலரை அரசாங்கம் வெயில் காலத்தில் அப்புறப் படுத்தி, மேற்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பிவிட்டார்களாம். அத்தோடு, அடுத்த வருடம் கூட லெனின்கிராட்டில் இருக்க விரும்பிய மனிதர்களுக்கு, அரசாங்கமே விதைகள் கொடுத்து காய்கறி வளர்க்க உதவி செய்தார்களாம். முதன் முறையாக, சோவியத் ரஷ்யாவில், தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் காய்கறி வகைகளைத் தானே பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டதாம். இது தவிர தனியாக கூட்டுறவுத் தோட்டங்களிலும் வந்து விவசாயம் செய்ய மக்கள் அழைக்கப் பட்டார்களாம்.

வேனிற் காலத்திலேயே, பொதுக் கழிப்பிடங்கள், பொதுக் குளியலறைகள் கட்டப்பட்டு, அடுத்தடுத்த பனிக்காலங்களுக்கு லெனின்கிராட் தயார் செய்யப்பட்டது. மொத்தம் நான்கு வருடங்கள் நீடித்த லெனின்கிராட் முற்றுகை, முதல் வருடம் மட்டும் தான் பல உயிர்களைப் பலிவாங்கியது. கடைசியாக நான்காவது வருடம் அந்த ஊரில் இருந்த மக்களுக்கு அரசாங்கம் ‘medal for the defence of Leningrad’ என்று விருது வழங்கிக் கௌரவித்ததாம்!

The Winter Garden - முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்கிறார் ஆசிரியர். என்னால் ஒப்ப முடியவில்லை. ஏதாவது ஒரு வெராவையோ, அல்லது, ஒரு சில வெராக்களுடனோ பேசாமல், எப்படி இப்படி ஒரு கதையை எழுத முடியும் ? வெறும் ஆராய்ச்சி, வரலாற்றுக் கதைகள் வைத்து எப்படி இப்படி ஒரு காவியத்தைப் படைக்க முடியும்?

புத்தகம் படித்து முடித்தபின் “The Siege of Leningrad” குறித்து வேறு கதைகள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன், வேறு எதுவும் கிடைக்கவில்லை!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

5 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com